லக்னோ: நாளை மறுநாள் முதற்கட்ட சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தில், இன்று மாலையுடன் பரப்புரை ஓய்வடையவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் சூறாவளியாக சுயன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். 403 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே உள்ள நிலையில், பரப்புரை இன்று மாலையுடன் நிறைவுபெறுகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருவதால் உத்திரப்பிரதேச தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. ஒரு வாக்குச்சாவடியில் 1,250 முதல் 1,500 பேர் மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான உள்ளூர் வாக்குச்சாவடிகளில், உள்ளூர் காவல்துறையினருடன் துணை ராணுவத்தினரும் களமிறக்கப்படுகின்றனர். வாக்குபதிவினை வீடியோ மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் பிப்ரவரி 14ம் தேதி உத்திரப்பிரதேசத்தில் 2ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதேநாளில் பஞ்சாப், உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும். மற்றொரு மாநிலமான மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும்.