புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரயில் டிக்கெட் கொடுத்ததாக காங்கிரஸ் மீது பாய்ந்துள்ளார் பிரதமர்
நரேந்திர மோடி
. ஆனால் இந்த விவாகரத்தில் தெரிந்தோ தெரியாமலோ, சேம் சேட் கோல் போட்டுள்ளார் பிரதமர் என்று கருத்துக்கள் எழுந்துள்ளன.
அதாவது மத்திய அரசு ரயில்களை விட்டது மட்டும் சரி, ஆனால் அதற்கு டிக்கெட் எடுக்க உதவியது தவறா என்று எதிர்க்கட்சிகள் விளாசியுள்ளன.
இந்தியாவைக் கொரோனாவைரஸ் தாக்கி முதல் அலை உருவானபோது நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்தது புலம் பெயர் தொழிலாளர்கள் விவகாரம்தான். குறிப்பாக வட மாநிலங்களான உ.பி, பீகார், ஜார்க்கண்ட் என பல்வேறு இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், வட கிழக்கு மாநில தொழிலாளர்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
முதல் அலை வந்து லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் வேலை இழந்து, வருவாய் இழந்து, சாப்பிடக் கூட வழி இல்லாத நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர். இதையடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் என்றால் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் கால் நடையாகவே தத்தமது மாநிலங்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை கால்நடையாகவே நடந்த இவர்களது துயரம் சர்வதேச அளவில் பேசு பொருளானது.
இதையடுத்து மத்திய அரசு தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. ஆனால் இந்த ரயில்களில் பயணம் செய்யத் தேவையான கட்டணத்தை செலுத்தக் கூட வழி இல்லாமல் தடுமாறினர்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
. இதையடுத்து காங்கிரஸ் கட்சி அவர்களுக்குக் கை கொடுத்தது. இலவசமாக டிக்கெட் கொடுத்து அவர்களை பயணம் செய்ய வைத்தது. அதாவது அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு ரயில்களில் பயணித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான டிக்கெட்டை மட்டும்தான் காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப தேவையான ரயில்களை ஏற்பாடு செய்தது மத்திய அரசுதான்.
ஆனால் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்ததை மறைத்து விட்டு, அதற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்த காங்கிரஸ் மீது மட்டும் பிரதமர் மோடி பாய்ந்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. மேலும் பிரதமரின் பேச்சைப் பார்த்தால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு யாரும் உதவியிருக்கக் கூடாது, அவர்களுக்கு உதவியது தவறு என்பது போல இருக்கிறது. இது தொழிலாளர்களுக்கு எதிரான பேச்சு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
முதல் அலையின்போது மத்திய ரயில்வே எத்தனை சிறப்பு ரயில்களை இயக்கியது என்பது குறித்து ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் அடுத்தடுத்து டிவிட்டரில் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதாவது பல்வேறு ரயில்களை இயக்கி நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து செல்வதை மத்திய அரசுதான் ஊக்குவித்தது. அவர்கள் ரயில் விட்டதால்தான் அதில் தொழிலாளர்கள் பயணம் செய்தனர். அதில் பயணம் செய்ய காசு இல்லாதவர்களுக்குத்தான் காங்கிரஸ் உதவியது. இதில் என்ன தவறு இருக்கிறது. இதில் காங்கிரஸ் என்ன தவறு செய்து விட்டது. அப்படியானால் ரயில் விட்ட மத்திய அரசும், பாஜகவும் தவறு செய்யவில்லையா.. அவர்கள் செய்தது மட்டும் சரியா என்றும் காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளன.
2020ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட டிவீட்டில், புலம் பெயர்ந்த 63.1 லட்சம் தொழிலாளர்கள் 4621 சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்குச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதை வைத்தும் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியைக் கேள்வி கேட்டு வருகின்றன. இத்தனை பேரை இடம் பெயரச் செய்தது யார் , காங்கிரஸா இடம் பெயர வைத்தது என்றும் அவர்கள் கேட்கின்றனர்.
இதுகுறித்த ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள டிவீட்டில், பிரதமர் நரேந்திர மோடி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தவறான தகவலை நாடாளுமன்றத்தில் கொடுத்துள்ளார். உண்மையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் வெளியேற வேண்டாம். அவர்களுக்கு தங்குமிடமும், உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை அப்போது டெல்லி அரசு செய்திருந்தது. இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ உரையும் நிகழ்த்தியுள்ளார். அதற்கான ஆதாரமும் உள்ளது.
ஆனால் பிரதமர் நாடாளுமன்றத்தில் போலியான தகவலை வெளியிட்டுள்ளார். மக்கள் துயரப்படும் விவகாரங்களில் மிகவும் பொறுப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் பிரதமர் போன்ற பொறுப்பான தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நாடு எதிர்பார்க்கிறது. ஆனால் அவரோ அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதில் கவனம்செலுத்துகிறார். பிரதமரின் அரசியல் அவமானகரமானது என்று கூறியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.