கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்காலை விழாவன்று திருவனந்தபுரம் நகர் முழுக்க பல லட்சம் பெண்கள் ஒரே இடத்தில் கூடி பொங்கலிடுவார்கள்.
இக்கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்பட்டது.
இது போல 2009-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 25 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். இதுவும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இத்தகு சிறப்பு மிக்க ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா, நாளை தொடங்குகிறது. இதுபற்றி கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:-
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்கல் விழா நாளை தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ஒவ்வொரு நாளும் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 9-ம் திருவிழாவான 17-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அன்று காலை 10.50 மணிக்கு கோவிலின் பண்டார அடுப்பில் தீ மூட்டப்படும்.
தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிடும் நிகழ்ச்சி தொடங்கும். இவ்விழாவில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு பக்தர்களை வீடுகளிலேயே பொங்கலிடுமாறு அறிவுறுத்தியிருந்தோம். இந்த ஆண்டும் கொரோனா பரவல் முடிவுக்கு வரவில்லை. எனவே பக்தர்களை இந்த ஆண்டும் வீடுகளிலேயே பொங்கலிட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதே நேரம் கோவிலில் திருவிழா காலங்களில் வழக்கமாக நடைபெறும் வழிபாடுகள் மற்றும் பண்டார ஓட்டம் ஆச்சாரமுறைப்படி நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.