ஒரே இலக்கணப் பிழை.. இவரெல்லாம் வைஸ் சான்சலரா.. வெளுத்தெடுத்த வருண் காந்தி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள
சாந்திஸ்ரீ துல்லிப்புடி பண்டிட்
வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸை
பாஜக
எம்.பி.
வருண் காந்தி
விமர்சித்துள்ளார்.

டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தீவிர இந்துத்வா ஆதரவாளராக தன்னை அவ்வப்போது காட்டிக் கொண்டவர் சாந்திஸ்ரீ. அவர் போட்ட பழைய டிவீட்டுகளை பலரும் எடுத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தைக் கண்டித்தவர் இவர். இதுபோல பல சர்ச்சையான கருத்துக்களைப் பதிவிட்டவர். இவரது நியமனத்தை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதேசமயம், மற்றவர்கள் விமர்சித்து வருகின்றனர். தற்போது இவரது நியமனத்தை பாஜக எம்பி ஒருவரே பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல வருண் காந்திதான்.

பாஜக எம்.பியாக இருந்தாலும் கூட தொடர்ந்து பிரதமர் உள்ளிட்டோருக்கு பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக பகிரங்கமாக கேள்விகள் கேட்டு வருகிறார் வருண் காந்தி. விவசாயிகள் பிரச்சினையில் அவர்களுக்கு முழு ஆதரவைத் தெரிவித்திருந்தார். தற்போது சாந்திஸ்ரீ வெளியிட்டுள்ள ஒரு பிரஸ் ரிலீஸை வைத்து அவரை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸ் இது. இதைப் பார்த்தால் படிப்பறிவில்லாத ஒருவர் எழுதியது போலவே இருக்கிறது. முழுக்க முழுக்க இலக்கணப் பிழைகள் உள்ளன. will strive என்று எழுவதற்குப் பதில் would strive என்று எழுதியுள்ளார். student-friendly என்று எழுதுவதற்கு students friendly என்று எழுதியுள்ளார். excellence என்று எழுதுவதற்குப் பதில் excellences என்று எழுதியுள்ளார். இதுபோன்ற தரக்குறைவான, மலிவான நியமனங்கள் நமது இளைஞர் சமுதாயத்தை கடுமையாக பாதிக்கும் என்று கூறியுள்ளார் வருண் காந்தி.

தனது நியமனத்திற்கு நன்றி கூறி சாந்திஸ்ரீ துல்லிப்புடி பண்டிட் வெளியிட்டிருந்த பிரஸ் ரிலீஸ் இது. அதில் தன்னை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் சாந்திஸ்ரீ. இந்த பிரஸ் ரிலீஸ்தான் தற்போது கேலிக்கூத்தாக மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.