சென்னை: “தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று சட்டப்பேரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ பாலாஜி தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு விவாதத்தில் விசிக எம்.எல்.ஏ பாலாஜி பேசும்போது, ”அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், மகளிருக்கு சொத்தில் சம உரிமை ஆகியவற்றை நிறைவேற்றி தந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாரிசுக்கு இல்லாத அக்கறை, தமிழகத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் வந்த சிலருக்கு வருகின்றது. தங்களது உரிமைக்காக யார் போராடுகிறார்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். நீட் தேர்வு மட்டுமல்ல, நுழைவுத் தேர்வே கூடாது என்பதே நமது நிலைபாடு. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வரை பயிற்சி மையங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
முன்னதாக, நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. முதலில் சட்டப்பேரவை சபாநாயகர், ஆளுநரின் கடிதத்தை விளக்கி உரையாற்றினார். பின்னர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், ஆளுநரின் செயல் தமிழக அரசு அமைத்த ஏ.கே.ராஜன் குழுவை அவமதிக்கும் செயல் என்றும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மசோதாவை நிராகரித்திருப்பது அடிப்படை அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் கூறினார். தொடர்ந்து பல்வேறு கட்சி உறுப்பினர்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.