டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நூறாண்டுகளில் மனிதகுலம் கொரோனாபோன்ற ஒரு தொற்று நோயை பார்த்ததில்லை. கொரோனா பரவ துவங்கிய போது, இந்தியாவில் என்ன ஆகும், இதனால் உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என விவாதிக்கப்பட்டது. ஆனால், தன்னம்பிக்கை மற்றும் 130 கோடி இந்தியர்களின் முயற்சியால், இந்தியாவின் முயற்சிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைத்தது. பெருந்தொற்று காலத்தில், இந்தியா தலைமைப்பண்புடன் செயல்பட்டது. கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது. கொரோனா அலையின் போதும் ஜம்மு – காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தன. கொரோனா தொற்றின் போது விளையாட்டு வீரர்கள் நாட்டிற்கு பல விருதுகளை கொண்டு வந்தனர். நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தும் இலக்கை நோக்கி இந்தியா வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. சிறுகுறு தொழில்கள் ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அதேபோல விவசாயத்துறையும் அதிக வேலைவாய்ப்புகளைக் கொடுக்கிறது. அவர்களுக்கு எந்த பின்னடையும் ஏற்படாமல் இருப்பதை நாம் உறுதி செய்தோம். விவசாயிகள் அதிக அளவிலான குறைந்தபட்ச விலையைப் பெற்றார்கள். அவர்கள், அவர்களுடைய பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் பெற்றனர். தமிழ்நாடு, உத்தரப் பிரதேசத்தில் ராணுவத் தளவாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிப்படுத்திய முதிர்ச்சியற்ற தன்மை இந்த நாட்டு மக்களை அதிருப்தியடையச் செய்தது. நமது தவறுகளை திருத்திக் கொண்டு, புதிய முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இந்தியாவை முன்னெடுத்து செல்ல வேண்டும் என சிந்திக்க வேண்டும். இந்தியாவை முன்னேற்றுவதில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; சில தலைவர்கள் தங்களுடைய தொகுதியை கூட கவனிப்பதில்லை என ராகுல் காந்தி மீது மோடி சாடினார். எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றி கவலைப்பட வேண்டாம் என சிலர் செயல்படுகின்றனர். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமர்சிக்கக்கூடாது. வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து; வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது; எமர்ஜென்சி இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.