உலகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, டெல்டா, ஆல்பா, ஒமைக்ரான் போன்ற உருமாறிய கொரோனா தொற்றுகள் புதிதாக பரவி மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசிகள் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகள் புதிய தொற்று மாறுபாடுகள் வெளிவருவதைத் தடுக்காது என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர் சாரா எல் கேடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆராய்ச்சியின் முடிவில் கூறியிருப்பதாவது:- முதலில் கொரோனா வைரஸ் தன்னை பிரதிகளாக உருவெடுக்கிறது. ஒவ்வொரு முறையும் அது உருவாகும்போது வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு பிழை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பிறழ்வை ஏற்படுத்திய வைரஸ், ஒன்று செயலிழந்து போகலாம், வைரஸை பலவீனப்படுத்தலாம் அல்லது தற்செயலாக வைரஸூக்கு உயிர்வாழும் தன்மையை அளிக்கலாம்.
ஒவ்வொரு முறையும் வைரஸ் உருவாகும்போது மாற்றமடையும் அபாயம் இருப்பதால், அதன் வீரியம் எவ்வளவு வேகமாக பிரதிபலிக்கிறதோ அந்த அளவு புதிய மாறுபாடுகளாக தோன்றும் அபாயமும் அதிகமாக இருக்கிறது. நாம் பாதிக்கப்படும்போது வைரஸ் நமக்குள் இனப்பெருக்கம் செய்வதால், மக்களின் தொகையில் புதிய மாறுபாடுகள் உருவாகும் ஆபத்தும் அதிகம்.
கொரோனா வைரஸ்களை தடுப்பூசிகள் எதிர்கொள்கிறது என்பது உண்மைதான். கடுமையான நோய் மற்றும் இறப்பைக் குறைப்பது தடுப்பூசிகளின் குறிக்கோளாக இருக்கிறது. லட்சக்கணக்கான உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன.
ஆனால், ஒரு பயனுள்ள தடுப்பூசி, தடுப்பூசி போடப்பட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டாலும் அது பரவுவதற்கான வாய்ப்பை குறைக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நோய்த் தொற்று மற்றும் பரவுதலை முற்றிலுமாகத் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா தடுப்பூசிகளால் உருவாக்க முடியாது என்பது கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையின் மூலம் தெளிவாகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு: கனடா பாணியில் நியூசிலாந்தில் போராட்டத்தை தொடங்கிய டிரக் டிரைவர்கள்