சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுவதாக இருந்த 10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்து, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால், தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 1ந்தேதி முதல் கல்வி நிலையங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால், இதையடுத்து 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய திருப்புதல் தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.
அதன்படி 10ஆம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 9ஆம் தேதி (நாளை) தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாவது திருப்புதல் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது. அதுபோல, 12ஆம் வகுப்புக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்.9-பிப்.16 வரையிலும் 2ஆம் திருப்புதல் தேர்வு மார்ச் 28-ஏப்ரல் 5 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 10வது 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடவை திருப்புதல் தேர்வுக்கு முதன்முறையாக ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட உள்ளன. தேர்வுகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை, மதியம் 2 மணி முதல் 5 மணி வரை என இரு பிரிவுகளாக நடத்தப்படும் என்றும், பொது தேர்வுகளுக்கான கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்படும். தேர்வு முடிந்ததும் விடைத்தாள்கள் மாற்று பள்ளிகளில் மதிப்பீடு செய்யப்படும். பொதுத்தேர்வுக்கு ஒரு முன்னோட்டமாக இந்த தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.