சென்னை: நாடு முழுவதும் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான அளவுகோலையும், சட்டக் கல்வியின் தரத்தையும் ஒருபோதும் குறைக்கக் கூடாது என்று அகில இந்திய பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.‘வேறு பணி செய்துவரும் பெண் ஒருவர், தனது வேலையை விட்டு விடாமல் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொள்ளலாம்’ என்று குஜராத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அகில இந்திய பார் கவுன்சில் மேல்முறையீடு செய்தது. அதில், ‘வருமானம் ஈட்டும் வேலையில் உள்ள யார் வேண்டுமானாலும் வழக்கறிஞராகப் பதிவு செய்ய இந்த உத்தரவு வழிவகுத்துவிடும்.
மேலும், இதை மேற்கோள்காட்டி பிற வேலைகளில் உள்ள பலரும் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முன்வருவார்கள். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு: சமூக விரோதிகள் பலர் சட்டக் கல்லூரிகளில் ஒரு வகுப்பில்கூட பங்கேற்காமல் சட்டப் படிப்பையும் முடித்து வழக்கறிஞர்களாக உலாவருகின்றனர். யார் வேண்டுமானாலும் சட்டம் படிக்கலாம் என்ற அளவுகோலையும், நுழைவுத் தேர்வுக்கான தரத்தையும் அகில இந்திய பார் கவுன்சில் மேலும் மேலும் குறைத்துக்கொண்டே செல்வதால், சட்டக் கல்வியின் தரமே இன்று கேள்விக்குறி ஆகிவிட்டது.
கடந்த 2019 கணக்கெடுப்பின்படி தற்போது நாடு முழுவதும் 1,500 சட்டக் கல்லூரிகள் உள்ளன. இதில் 75 சதவீதம் தனியார் கல்லூரிகள். புதிதாக சட்டக் கல்லூரி திறக்க பார் கவுன்சில் 3 ஆண்டுகள் தடை விதித்துள்ள நிலையில், சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த சுயபரி சோதனை செய்துகொள்ள வேண்டும். சட்டக் கல்வி, சட்டக் கல்லூரிகளின் சேர்க்கைக்கான தரத்தை ஒருபோதும் குறைக்கக் கூடாது. பட்டயக் கணக்காளர்களுக்கான இந்திய சங்கம் (ஐசிஏஐ), பட்டயக் கணக்காளர்களுக்கான நுழைவுத் தேர்வை எவ்வளவு கடினமாக கையாள்கிறது என்பதை பார்க்க வேண்டும். தற்போது 17 லட்சம் வழக்கறிஞர்கள் நாடு முழுவதும் உள்ளனர்.
தவிர ஆண்டுதோறும் 80 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். ஒரு மாநிலத்தில் மட்டும் 100 சட்டக் கல்லூரிகள் உள்ளன. அந்த அளவுக்கு அங்கு சட்டம் படித்த பேராசிரியர்கள் உள்ளனரா? பல கல்லூரிகள் சான்றிதழ் வழங்குவதற்காக பெயரளவுக்கு மட்டுமே இயங்குகின்றன. சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் சட்டக் கல்லூரிகளில் தேர்வுக்கான அளவுகோலை மாற்றியமைக்க வேண்டும். அத்துடன் சட்டக் கல்லூரி சேர்க்கையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கடினமாக்க வேண்டும். இந்த இருமுனை தாக்குதல்களை நிறைவேற்றாவிட்டால், இந்தியாவில் சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித் தனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மாநில அரசு தலைமை வழக்கறிஞருமான ஏ.நடராஜன் கூறியதாவது: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கருத்து 200 சதவீதம் வரவேற்கத்தக்கது. சட்டக் கல்லூரி, சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டுமானால், மருத்துவம் போல நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க வேண்டும்.
5 ஆண்டு சட்டம் படிப்பவர்கள் கடைசி 2 ஆண்டுகளும், 3 ஆண்டு சட்டம் படிப்பவர்கள் கடைசி ஒரு ஆண்டும் கண்டிப்பாக உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் கட்டாய தொழில் பயிற்சி பெற வேண்டும். இதை பார் கவுன்சில் மேற்பார்வையிட்டு சட்ட மாணவர்களுக்கு தகுந்த வழக்கறிஞர்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். வழக்கறிஞர் தொழிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்களும் தகுதியான மாணவர்களுக்கு மட்டுமே சான்று அளிக்க வேண்டும். அத்துடன் சட்டம் படிப்பதற்கான வயது வரம்பையும் குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.