நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனுவை திரும்பப் பெற பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள் என்பதால் திருநெல்வேலியில் திமுகவில் போட்டி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பம்மி போட்டியில் இருந்து பின்வாங்கினர். அதுமட்டுமல்ல, ஒரு வார்டில் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அதிமுக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளரையும் இழந்தது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு நேற்று (பிப்ரவரி 07) கடைசி நாள் என்பதால், போட்டியில் இருந்து விலக விரும்பியவர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
அந்த வரிசையில், திருநெல்வேலி மாநகராட்சியில், 3வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்த திமுக போட்டி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பம்மி வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவியைக் குறி வைத்து திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ என்.மலைராஜா திருநெல்வேலி மாநகராட்சியில் 3வது வார்டுக்கு தாக்கல் செய்த தனது வேட்புமனுவை திங்கள்கிழமை வாபஸ் பெற்றார். திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூர் மண்டல முன்னாள் தலைவர் பி.சுப்பிரமணியன் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அதே வார்டில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், மலைராஜா வேட்புமனு தாக்கல் செய்ததால் அவர் திமுகவில் அதிருப்தி போட்டி வேட்பாளராக இருப்பார் என்று யூகங்கள் எழுந்தன.
மேயர் பதவியைக் குறிவைத்து 3வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, மலைராஜா திமுகவில் உயர்மட்ட தலைவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக சென்னையில் முகாமிட்டு இருந்தார். அவர் திருநெல்வேலியில் 3வது வார்டில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார். அதே நேரத்தில், 3வது வார்டுக்கு திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சுப்பிரமணியனை அங்கீகரித்து ‘அங்கீகாரக் கடிதம்’ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்ற கேள்விகளும் யூகங்களும் எழுந்தன.
பின்னர், சுப்பிரமணியன் திருநெல்வேலி மாநகராட்சி 3வது வார்டில், திமுக சார்பில் போட்டியிடுவதற்கான அங்கீகாரக் கடிதத்தை பெற்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்தாலும் திமுக உயர்மட்ட தலைவர்களின் ஆதரவில் மலைராஜா தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், வேட்புமனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளில் அவருடைய நம்பிக்கை பொய்த்ததால், மலைராஜா தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
மலைராஜா வேட்புமனுவை வாபஸ் பெற்ற பிறகு, “திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள திமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய கடுமையாக உழைப்பேன்.” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே போல, சங்கர் நகர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான எம்.பேச்சிபாண்டியனும், கடைசி நேரத்தில் கட்சி மேலிடத்தால் மற்றொரு வேட்பாளருக்கு பதிலாக சங்கர் நகர் டவுன் பஞ்சாயத்து 3 மற்றும் 5வது வார்டில் வேட்புமனு தாக்கல் செய்தார். இருப்பினும், அவர் வேட்புமனுவை திங்கள்கிழமை வாபஸ் பெற்றார்.
இது குறித்து வெளியிட்ட வீடியொவில், பதட்டத்துடனும் வெளிறிய முகத்துடனும் காணப்பட்ட பேச்சிபாண்டியன், கட்சி மேலிடத்தின் அறிவுறுத்தலின்படி போட்டியில் இருந்து விலகியதாகவும், கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைக்க உறுதியளித்ததாகவும் கூறினார்.
இப்படி, திருநெல்வேலி மாநகராட்சியில், திமுகவில் போட்டி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பம்மி, தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் திமுகவினர் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், அதிமுகவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திருநெல்வேலி மாநகராட்சியில் 10வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் விஜி கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர். இது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் போட்டியில் இருந்து விலகியது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், “விஜி மற்றொரு வேட்பாளரின் குடும்பத்தினரிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளானதால், விஜி வாபஸ் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்று தெரிவித்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சியில், திமுகவில் போட்டி வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் பம்மி, வேட்புமனுவை வாபஸ் பெற்றதும் அதிமுக தனது அதிகாரப்பூர்வ வேட்பாளரை இழந்ததும் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனத்தைப் பெற்றுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“