பெங்களூரு-பெங்களூரு மருத்துவமனைகளில் மீண்டும் தோல் தானம் எண்ணிக்கை, வழக்கத்துக்கு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தீ விபத்து மற்றும் பல்வேறு காயங்களால் தோல் சிதைந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தானம் செய்வோர் தோல் பயன்படுத்தப்படுகிறது.கண், ரத்தம் போல தோல் தானமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விருப்பமுள்ளோர், மருத்துவமனைகளில் பதிவு செய்கின்றனர்.இறந்த பின், அவர்களின் உடலின் குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் தோல் எடுத்து மருத்துவமனைகள் பதப்படுத்துகின்றன.பெங்களூரில் அதிகமான தோல் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கலான சூழலை சமாளிக்க வேண்டியிருந்தது.கொரோனாவால் தோல்தானம் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதனால் இருப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது. தற்போது மீண்டும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பெங்களூரு மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன டாக்டர் ரமேஷ் கூறியதாவது:நாள்தோறும் இரண்டுக்கும் அதிகமான தோல் பாதிப்புகள் பதிவாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 200 பாதிப்பு வரை பதிவானது உண்டு.தானமாக பதிவு செய்யப்பட்ட இறந்தவர்களின் தோல்களை பதப்படுத்தி, சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.கடந்த இரண்டாண்டுகளாக இருப்பு மிகவும் குறைந்து, அவசர சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.மேலும், கொரோனா பாதிப்பால் இறந்தோரின் தோல் தானமாக வழங்கப்பட்டிருப்பினும் நிராகரிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பி வருகிறது.அதே போல், தொழிற்சாலை விபத்து, கேஸ் கசிவு பாதிப்பால் ஏற்படும் விபத்தாக பதிவாகின்றன. சிகிச்சை முறையிலும் நவீன மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement