டெல்லி: 10 ரூபாய் நாணயத்தை எந்த தயக்கமின்றி உபயோகிக்க வேண்டும். டெண்டர், சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம் எனவும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை என கருதி ஏற்றுக்கொள்ள மறுக்கப்படுகிறதா? ஒருவேளை பத்து ரூபாய் நாணயங்கள் வணிகர்களால் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 10 ரூபாய் நாணயம் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு மக்களுடைய பழக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் சட்ட பூர்வமாக நடைபெறக்கூடிய டெண்டர்கள் மற்றும் சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு பத்து ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம். ஆனால், அவ்வப்போது 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்குவதற்கும் தவறான எண்ணங்களை போக்கவும் மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வபோது ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு செய்திகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டு மக்கள் அனைவரும் 10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமுமின்றி உபயோகிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.