மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்திய தாவூத் இப்ராகிமும், அவனின் கூட்டாளிகளும் பாகிஸ்தானில் மறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. மத்திய அரசு தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருக்கிறது. தற்போது தாவூத் இப்ராகிம், அவனின் கூட்டாளிகள் சோட்டா சகீல் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி புதிதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. தாவூத் கும்பல் இந்தியாவில் சிலீப்பர் செல்களை நடத்துவதாகவும், அவர்கள் மூலம் முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை தாக்குவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தனது எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டு இருக்கிறது. அவர்களின் செயல்களால் நாட்டில் மத வன்முறைகள் ஏற்படுவதாகவும், ஜெய்ஸ்-இ-மொகமத், அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு செயல்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 120 பி பிரிவின் கீழும், 17, 18, 20, 21, 38, 40-வது சட்டப்பிரிவின் கீழும் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் பதுங்கி இருக்கும் தாவூத் கூட்டாளிகளை இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் இந்த புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது. சமீபத்தில் கூட ஐக்கிய அரேபிய எமிரேட்டில் தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி அபு பக்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட இருக்கிறார். அபு பக்கர் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான்.
தேசிய புலனாய்வு ஏஜென்சி தற்போது புதிய வழக்கு பதிவு செய்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள தாவூத் கூட்டாளிகள், “தங்களுக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ள குற்றச்சாட்டில் எந்த வித தொடர்பும் கிடையாது. அனைத்து குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றது. இந்திய அரசு பல ஆண்டுகளாக இதை செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவர்களால் எதையும் நிரூபிக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.