பெங்களூரு: கர்நாடகவில் புர்கா அணிந்து வந்த மாணவியை நோக்கி, காவித் தூண்டு அணிந்திருந்த மாணவர்கள் கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வந்த நிலையில், தற்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இன்று காலை மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரிக்கு புர்கா அணிந்து தனியாக மாணவி ஒருவர் வந்தார். அவரைக் கண்டதும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள், அவர் முன் நின்று ”ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷம் எழுப்பினர். அப்பெண்ணும் அம்மாணவர்களுக்கு எதிராக ”அல்லாஹு அக்பர்” என்று குரல் எழுப்பியபடி தன் பாதையில் நடந்தார். உடனே கல்லூரி ஊழியர்கள் வந்து அப்பெண்னை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. காவித் தூண்டு அணிந்த மாணவர்களின் செயல் ஏற்புடையது அல்ல என்றும், கல்லூரிகளில் வன்முறைக்கு இடமில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Full video. pic.twitter.com/rUvjJZuThe
— Mohammed Zubair (@zoo_bear) February 8, 2022
இந்த நிலையில் அம்மாணவி முஸ்கான், என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கும்போது, “நான் கவலைப்படவில்லை. எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே கல்லூரிக்கு வந்தேன்.புர்கா அணிந்ததால் என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை. என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். அதனைத் தொடர்ந்தே நான் அல்லாஹு அக்பர் கூற ஆரம்பித்தேன்.
எனது இந்து நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர். காவித் துண்டு அணிந்திருந்தவர்கள் வெளியிலிருந்து வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன். இதற்கான போராட்டம் தொடரும். ஆடைக்காக அவர்கள் கல்வியை அழிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஹிஜாப் விவகாரத்தில் எதிர்வினை என்ற பெயரில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்த நிலையில், கர்நாடகாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.