புதுடெல்லி:
அருணாச்சல பிரதேசத்தின் காமேக் செக்டாரில் நேற்று முன்தினம் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி நடந்தது.
இதற்கிடையே, பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உடல்கள் இன்று மீட்கப்பட்டது என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேதனையை அளித்தது. தேச சேவைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் தன்னலமற்ற தியாகம் என்றும் நினைவு கூரப்படும். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது தேசத்திற்கு அவர்களின் முன்மாதிரியான சேவையை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல்கள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.