கென்யா முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவின் பார்வையிழந்த மகள், கேரளா கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பார்வை பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், மகளின் மேல் சிகிச்சைக்காகவும் குடும்பத்துடன் கேரளா வந்துள்ளார்ரெய்லா ஒடிங்கா.
ரெய்லா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு 2017 ல் 39 வயதில், திடீரென மூளையில் ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான், சீனா நாடுகளில் பலமுறை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. எனினும் பார்வை திரும்ப கிடைக்கவில்லை.
இந்தியாவின் ஆயுர்வேதத்தின் சிறப்பை அறிந்த ரெய்லா ஒடிங்கா, கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு மகளை சிகிச்சைக்காக அனுப்பினார். 2019ல் இங்கு ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றபின்பு பார்வை மேம்பட்டதும் ரோஸ்மேரி கென்யா திரும்பினார்.
தொடர்ந்து ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்ட அவருக்கு இழந்த பார்வை கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த ரோஸ்மேரி, கென்யா நாட்டின் தொலைகாட்சிகளில் இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவ முறை, உணவு முறைகளால் தான் பார்வை பெற்ற விதத்தை விளக்கினார்.
முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவும் இந்தியாவின் மருத்துவ பாரம்பரியம் குறித்து பல இடங்களில் பெருமையுடன் பேசி வந்தார்.இழந்த பார்வை மீண்டும் கிடைக்க காரணமான இந்திய மருத்துவத்தின் அற்புதத்தை பல உலக நாடுகள் உணர இது காரணமானது.
ரோஸ்மேரி நெகிழ்ச்சி
தற்போது மகளுக்கு மேலும் மூன்று வாரம் சிகிச்சை பெற, ரெய்லா ஒடிங்கா குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் கூத்தாட்டுக்குளம் வந்தார். அவரை ஸ்ரீதரீயம் தலைமை மருத்துவர் டாக்டர் நாராயணன் நம்பூதிரி, துணைத்தலைவர் ஹரிநம்பூதிரி, சி.இ.ஓ., பிஜூநம்பூதிரி வரவேற்றனர். மகளுக்கு பார்வை கிடைக்க காரணமான டாக்டர் நாராயணன் நம்பூதிரிக்கு, ரெய்லா ஒடிங்கா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.
தான் சிகிச்சை பெற்ற மருத்துமனைக்கு இரண்டாண்டுகளுக்கு பிறகு வந்த ரோஸ்மேரி ஒடிங்கா நெகிழ்ச்சியுடன் அங்கிருந்தவர்களிடம் கூறுகையில்,”இப்போது என்னால் அனைத்தையும் பார்க்க முடிகிறது. பார்வைஇழந்து கடந்த முறை வந்த போது நான் மிகவும் பரிதவித்தேன். ஓணம் பண்டிகையின் போது கேரள உணவுகளின் மணமும், சுவையும் மட்டுமே என்னால் உணர முடிந்தது. இப்போது நான் பார்த்து ரசித்து சாப்பிட முடிகிறது,” என்றார்.
இந்தியாவின் முதல் ஆயுர்வேத கண் மருத்துவமனைஆயுர்வேத மருத்துவமுறையில் கண்சிகிச்சையில் சாதித்து வருகிறது ஸ்ரீதரீயம் மருத்துவமனை. நம்பூதிரி குடும்பத்தினரால் 300 ஆண்டுகளாக இங்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் முதல் ஆயுர்வேத கண் மருத்துவமனை.
25 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதரீயம் ஆயுர்வேத கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டு, என்.ஏ.பி.எச்., அங்கீகாரம் பெற்று செயல்படுகிறது. 400 படுக்கை, 50 டாக்டர்களுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் மருந்துகளும் தயாரிக்கப்படுகிறது. கேரளாவில் கோட்டயத்தில் இருந்து 38 கி.மீ., துாரத்திலும், எர்ணாகுளத்தில் இருந்து 49 கி.மீ., துாரத்திலும் மருத்துவமனை உள்ளது.மேலும் விபரங்களுக்கு 0485-225 3007ல் தொடர்பு கொள்ளலாம்.
உலகெங்கும் பரவும் ஆயுர்வேதம்டாக்டர் நாராயணன் நம்பூதிரி கூறியதாவது: மூளை ரத்தக் குழாயில் ஏற்பட்ட திடீர் அடைப்பால் ரோஸ்மேரிக்கு கண் நரம்பு, நாடி தளர்ச்சி ஏற்பட்டது. இடது கண்ணில் முற்றிலும் பார்வை இல்லாமல், வலது கண்ணில் லேசான பார்வையுடன் இங்கு வந்தார். அவர் இங்கு வரும் போது ஊன்று கோல் பயன்படுத்தி நடக்கும் நிலை இருந்தது.
கண்ணில் அறுவை சிகிச்சை செய்து, ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளித்தோம். தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டார். இப்போது வலது கண்ணில் முழுமையாக, இடது கண்ணில் பரவாயில்லாமல் பார்வை கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இடது கண்ணில் முழுமையாக பார்வை மேம்பட சிகிச்சை அளிக்க உள்ளோம். இந்திய பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறையின் பெருமை உலகமெங்கும் பரவி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-
Advertisement