புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தற்கு மக்களவையில் நேற்று முன்தினம் பிரதமர் மோதி பதில் அளித்து உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் கடுமையாக சாடினார்.
இரண்டாவது நாளாக நேற்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்த பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சமீபத்தில் எங்களை விட்டுப் பிரிந்த லதாமங்கேஷ்கர், முதலில் கோவாவைச் சேர்ந்தவர். அவரது சகோதரர் ஹிருதய்நாத் மங்கேஷ்கர் தேசியவாதம் பற்றிய வீர் சாவர்க்கர் குறித்து கவிதை எழுதியதற்காக அகில இந்திய வானொலியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகளைவிமர்சித்ததற்காக புகழ்பெற்ற கவிஞரும் பாடலாசிரியருமான மஜ்ரூஹ் சுல்தான்புரி மற்றும் பேராசிரியர் தர்மபால் ஆகியோர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். கருத்துச் சுதந்திரத்தை காங்கிரசு முடக்கியது.
இந்திரா காந்திக்கு ஆதரவாக பேசாததற்காக எமர்ஜென்சியின் போது பழம்பெரும் பாடகர் கிஷோர் குமார் வெளியேற்றப்பட்டார்.குறிப்பிட்ட குடும்பத்திற்கு எதிரான எந்த எதிர்ப்பும் ஒருவரை சிக்கலில் தள்ளலாம். சீதாராம் கேஸ்ரி [முன்னாள் காங்கிரஸ் தலைவர்] இதற்கு ஒரு உதாரணம்.
இந்த மனப்பான்மையால் பல ஆண்டுகளாக இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஜனநாயக மதிப்பீடுகளை வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பழமையான கட்சி என்ற முறையில் காங்கிரஸ் இந்த விஷயத்தில் அதிகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.
இதையும் படியுங்கள்…
உ.பி. சட்டசபை தேர்தல்: தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்த பா.ஜனதா