Karnataka hijab controversy: Govt orders closure of educational institutions for 3 days: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருவதால், மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில், உடுப்பியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு கல்லூரியில் செவ்வாய்கிழமை காவி தாவணி அணிந்த மாணவர்களும், ஹிஜாப் அணிந்த மாணவர்களும் மோதிக்கொண்டதால் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார்.
“அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிர்வாகம் மற்றும் கர்நாடக மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று முதல்வர் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக ஹிஜாப் v/s காவி சால்வை விவகாரம் இடையூறு ஏற்படுத்துவதால், பாஜக அரசு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆன்லைன் வகுப்புகளை மீண்டும் நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா கோரிக்கை விடுத்திருந்தார்.
‘பிரச்னை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வாய்மூடி பார்வையாளர்களாகிவிட்டனர். இதனால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். ஹிஜாப் மற்றும் காவி தொடர்பான மோதல்கள் நடக்கும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உடனடியாக விடுமுறை அறிவித்து ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கேட்டுக்கொள்கிறேன். என்று சித்தராமையா கூறியுள்ளார். மேலும்,ஹிஜாப் மற்றும் காவி தொடர்பான பிரச்சனை மாணவர்களிடையே சண்டையை ஏற்படுத்துகிறது. பள்ளி, கல்லூரிகள் போர்க்களமாக மாறி வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி இது முற்றிலும் அவசியம். ஹிஜாப்-காவி பிரச்சினை உள்ளூர் மட்டத்தில் இணக்கமாக தீர்க்கப்பட்டிருக்கலாம். இந்த விவகாரத்தை அரசியலாக்கிய கர்நாடக பாஜக, இப்போது நிலைமையை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகிறது. பாஜகவின் மறைமுக அரசியல் நோக்கத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேபோல், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி கே சிவக்குமார் செவ்வாய்க்கிழமை கூறுகையில், மாநிலத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்களின் நிலைமை கையை விட்டுப் போய்விட்டது என்றார்.
இதனையடுத்து கர்நாடகாவின் பல பகுதிகளில் ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்து வருவதால், அடுத்த மூன்று நாட்களுக்கு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
இதனிடையே, கல்லூரிகளில் ஹிஜாப் தடைக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதி மற்றும் அமைதியைப் பேணுமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், இந்த விவகாரம் பொது அமைதிக்கு இடையூறாக இருப்பதாக அரசு வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கி தெரிவித்ததை அடுத்து நீதிபதி கிருஷ்ணா தீட்சித் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நீதிபதி தீட்சித், சில விஷமத்தனமானவர்கள் மட்டுமே இந்தப் பிரச்சினையை கொழுத்தி விட்டுக் கொண்டிருப்பதை கவனித்தார். போராட்டங்கள், கோஷங்கள் எழுப்புதல் மற்றும் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்குவது நல்லதல்ல என்றும் நீதிபதி தீட்சித் சுட்டிக்காட்டினார்.
விசாரணையை விரைவில் முடிக்க முடியும் என உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. “பொதுமக்களின் ஞானம் மற்றும் நல்லொழுக்கத்தின் மீது நீதிமன்றம் முழு நம்பிக்கை கொண்டுள்ளது” என்று நீதிபதி கூறினார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.