புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பாக ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம் வெளியிட்ட பதிவுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிப்ரவரி 5-ம்தேதி காஷ்மீர் ஒற்றுமை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் மேற்கொண்டு வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்தப் பதிவுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன.
இதையெடுத்து 6-ம் தேதி ஹூண்டாய் இந்தியா நிறுவனம் வெளியிட்ட விளக்கத்தில் “ஹூண்டாய் மோட்டார் இந்தியா கடந்த 25 ஆண்டுகளாக இந்தியச் சந்தையில் செயல்பட்டு வருகிறது. தேசியவாதத்தை மதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். முறையற்ற பதிவுகளை ஹூண்டாய் இந்தியா நிறுவனத்துடன் இணைப்பது, இந்தியாவுக்கான எங்கள் அர்ப்பணிப்பை, சேவையை அவமதிப்பதாகும். இந்தியா எங்களுக்கு 2-ம்தாய்வீடு போன்றது. பொறுப்பற்ற பேச்சுக்களை நாங்கள் சகித்துக்கொள்வதில்லை. அப்படியான விஷயங்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று பதிவிட்டது.
ஆனால் ஹூண்டாய் நிறுவனம்மன்னிப்பு கோரவில்லை என்றுசமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று ஹூண்டாய் இந்தியா ஒரு மன்னிப்புக் கடிதத்தை ட்விட்டரில் பதிவிட்டது. ‘ஹூண்டாய் நிறுவனத்தின் வணிக கொள்கையின்படி, அரசியல் மற்றும் மதம் சார்ந்த எந்த விஷயங்களிலும் ஹூண்டாய் நிறுவனம் கருத்து தெரிவிக்காது. ஆகவே, அந்தப் பதிவு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கொள்கைக்கு எதிரானது. பாகிஸ்தானில் உள்ள தனியார் டீலர் இந்த பதிவை இட்டுள்ளார். அதுஎங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட உடனே அந்தப் பதிவை நீக்கி விட்டோம். இந்தப் பதிவு தொடர்பாக இந்திய மக்களின் உணர்வுகளுக்கு காயம் ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் அதற்கு நாங்கள்வருந்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தீவிரமடைந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தென்கொரிய தூதரிடம் அதிருப்தியை பதிவு செய்தது. அதையடுத்து தென்கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுங் ஈயு-யோங், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து, இவ்விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடைபிடிக்கப்படும் காஷ்மீர் ஒற்றுமை தினத்துக்கு ஆதரவாக ஹூண்டாய் மோட்டார்ஸின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸும் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.