லண்டன்,
இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 66,183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,79,32,803 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 677 ஆக உயர்ந்துள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 54 லட்சத்து 93 ஆயிரத்து 580 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 22,80,546 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே டெல்டா, ஆல்பா, ஓமைக்ரான் என்று உருமாறும் வைரஸ்களால் ஏற்படும் தொற்றுகளை தடுக்கும் திறன், கொரோனா தடுப்பூசிகளுக்கு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறி்த்து இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறை உருவாகும்போது அது மாற்றமடையும் அபாயம் உள்ளதால், அதன் வீரியம் எவ்வளவு வேகம் பிரதிபலிக்கிறதோ, அந்த அளவுக்கு புதிய மாறுபாடுகளால் தோன்றும் அபாயமும் அதிகமாக உள்ளது.
ஒரு பயனுள்ள தடுப்பூசி என்பது, அது செலுத்தப்பட்ட நபருக்கு தொற்று ஏற்பட்டாலும் அது பரவுவதற்கான வாய்ப்பை குறைக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நோய்த் தொற்று, தொற்று பரவுதலை முற்றிலுமாகத் தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா தடுப்பூசிகளால் உருவாக்க முடியவில்லை என்றே தெரிகிறது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.