சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்குகிறது.
கரோனா பரவல் காரணமாகதமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. சில மாதங்களே வகுப்புகள் நடந்தன. இதனால், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு பதிலாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி, திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்கி 16-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்காக தேர்வுத் துறை மூலம் மாநிலஅளவில் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. இதுதவிர பொதுத்தேர்வு போல் அனைத்துவித கட்டுப்பாடுகளுடன் திருப்புதல் தேர்வை நடத்த வேண்டும் என பள்ளிகளின் தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த பிறகுவிடைத்தாள்கள் வட்டார அளவிலான வேறொரு பள்ளியில் திருத் தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி காரணமாக 10, 12-ம் வகுப்புக்கு நாளை (பிப்.10) நடக்கவிருந்த ஆங்கில பாடத்துக்கான திருப்புதல் தேர்வு, பிப்.17-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா அறி வித்துள்ளார்.