புதுச்சேரி : புதுச்சேரியில் நுாறு நாள் வேலைத் திட்டத்தை சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர், நுாறுநாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில், 66 ஆயிரத்து 628 பேர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களுக்கு 100 நாட்களுக்கு வேலை கொடுப்பதில் பெரிய சிரமம் இருக்காது.ஆனால் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக 14.38 நாட்களே வேலை கொடுக்கப் பட்டு வருகிறது. ஒருவருக்குக் கூட 100 நாட்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை.உலகிலேயே சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புத் திட்டம் இதுதான். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக, குறைவான நாட்கள் வேலை கொடுப்பது சட்டத்துக்கு புறம்பானதாகும்.இத்திட்டத்துக்கென 2021 – -22ம் நிதி ஆண்டில் ரூ. 8 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதையும் கூட முழுமையாக செலவு செய்யவில்லை. ரூ. 5.4 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.வரும் 2022–23ம் நிதி ஆண்டில் இந்த திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி, அனைத்து குடும்பங்களுக்கும் 100 நாட்கள் வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement