Hijab Row: பெண்களை பள்ளிக்கு போக விடாமல் தடுப்பது.. பயங்கரமானது.. மலாலா கருத்து

பெண்களை பள்ளிக்குப் போக விடாமல் தடுப்பது, அவர்களது படிப்பை தடுப்பது மிகவும் பயங்கரமானது என்று
மலாலா யூசுபசாய்
கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் பல்வேறு கல்லூரிகளில் இந்துத்தவா மாணவர்கள் நடத்தி வரும் அட்டகாசம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிராக அவர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். பெண்கள் என்றும் பாராமல் அவர்களை முற்றுகையிடுவது, வெறித்தனமாக கூச்சலிடுவது என்று பயமுறுத்தி வருகின்றனர். ஒரு கல்லூரியில் தேசியக் கொடியை இறக்கி விட்டு காவிக் கொடியை ஏற்றிய செயல் நேற்று அரங்கேறி நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கர்நாடக இந்துத்வா மாணவர்களின் இந்த செயலால் நாடே அதிர்ந்து கிடக்கிறது. பலரும் இந்த சம்பவத்தைக் கண்டித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நோபல் பரிசு பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்ணான மலாலாவும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அவர் வசித்தபோது சிறுமியாக இருந்தபோது பள்ளிக்குப் போகக் கூடாது என்று கூறி தலிபான்களின் தாக்குதலுக்குள்ளானவர் மலாலா. சிகிச்சைக்காக லண்டன் கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது அங்கேயே தொடர்ந்து வசித்து வருகிறார். இந்தியாவின் ஹிஜாப் விவகாரம் குறித்து மலாலா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மலாலா, பெண்கள் தங்களது ஹிஜாபுடன் பள்ளிகளுக்கு செல்ல விடாமல் தடுப்பது பயங்கரமானது. பெண்களின் ஆடை குறித்த எதிர்ப்புகள் இன்னும் தொடர்வது அபாயகரமானது. இந்தியத் தலைவர்கள் உடனடியாக தலையிட்டு, முஸ்லீம் பெண்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று தான் வெளியிட்டுள்ள டிவீட்டில் தெரிவித்துள்ளார் மலாலா.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு மகளிர் பியூசி கல்லூரியில்தான் முதலில் இந்த விவகாரம் வெடித்தது. அந்த கல்லூரியைச் சேர்ந்த 6 இஸ்லாமிய மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்று தடை விதித்தது கல்லூரி நிர்வாகம். இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். கல்லூரிக்கு வெளியே அமர்ந்து போராடி வந்தனர். இதையடுத்து வலதுசாரி மாணவர் அமைப்பு களத்தில் குதித்தது. இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து பதிலுக்குப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுப்பி, சிக்மகளூர்,
மாண்டியா
என இந்த போராட்டம் விரிவடையவே கல்லூரிகள் போர்க்களங்கள் போலானது. படிப்பை விட்டு விட்டு தேவையில்லாத போராட்டங்களில் மாணவர்கள் குதித்ததால் பெற்றோர்களும், பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காவித் துண்டு அணிந்து போராடுவோருக்கு எதிராக தலித் மாணவர்கள் நீலத் துண்டு அணிந்து போராட்டத்தில் குதித்ததால் போராட்டம் வேறு கோணத்திற்கு மாறியது. கல்லூரி வளாகங்கள் இப்படி மத, ஜாதி ரீதியாக பிளவுபட்டதைப் பார்த்து பொதுமக்கள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறையை அறிவித்துள்ளது கர்நாடக அரசு. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. அத்தனை பேரின் கவனமும் அந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.