Poll info : வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் சென்னைவாசிகள் எங்கே வாக்களிக்க வேண்டும், அருகில் இருக்கும் வாக்குச்சாவடிகள் எது என்பது தொடர்பான பல்வேறு தகவல்களை உடனே பெறும் வகையில் சென்னை மாநகராட்சி புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. http://election.chennaicorporation.gov.in – இணையத்திற்கு சென்று நீங்கள் உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பயன்படுத்தி மேற்கண்ட சேவைகளை பெற்றுக் கொள்ள இயலும்.
மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு அவை அனைத்தும் 22 வழங்கல் மையங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; கூட்டணி வைக்காமல், தனித்து களம் காணும் விஜய் மக்கள் இயக்கம்
மூன்றாவது மற்றும் இறுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இறுதி செய்யப்படும் பணி பிப்ரவரி 10ம் தேதி அன்று நிறைவுறும். பிறகு அவை வாக்கு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறிய அவர், பிப்ரவரி 10ம் தேதி அன்று 21 ஆயிரம் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். பிப்ரவரி 12ம் தேதிக்குள் வேட்பாளர்கள் பெயர் பட்டியல், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும் என்று அவர் கூறினார்.
புதன்கிழமை அன்று வேட்பாளர்களுடன் ஏ.ஆர்.ஓ. அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அடையாள அட்டையை வழங்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டங்களில் சமீபத்திய வழிகாட்டுதல்களை அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்துவார்கள் என்று கூறிய பேடி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க எந்த அனுமதியும் பெறத்தேவையில்லை என்றாலும் பொது பேரணிகளை நடத்துவதற்கு வேட்பாளர்கள் ARO அலுவலர்களை அணுக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்கள் ஒவ்வொரு ARO அலுவலகத்திலும் உள்ள காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அனுமதி வழங்கலாம் அல்லது மறுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அரங்கங்களில் 500 பேர் அல்லது 50% இருக்கைகள் மட்டும் நிரம்பியிருக்கும் வகையில் தேர்தல் கூட்டங்களை நடத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். வெளிப்புறங்களில் நடைபெறும் கூட்டங்களில் 1000 பேர் பங்கேற்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.