டெல்லி: 25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்பட இருப்பதாகவும், நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயல்படும் பத்திரிகையாளா்களுக்கு அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளா்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய ஊடக அங்கீகாரக் குழு (CMAC) முதன்மை இயக்குநர் ஜெனரல், பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) தலைமையில், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 25 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும், இந்தக் குழு, அதன் முதல் கூட்டம் தொடங்கிய நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் செயல்படும் மற்றும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை இடைநிறுத்துவதற்கு பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளா்’ என சமூக வலைதள தற்குறிப்புகள், கடிதத்தாள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
25 உறுப்பினா்களைக் கொண்ட மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்படவுள்ளது. அக்குழுவின் உறுப்பினா்களை மத்திய அரசு நியமிக்கும்.
பத்திரிகையாளா்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடா்பாக அக்குழுவே முடிவெடுக்கும்.
தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளா்களின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படும். அவ்வாறான சூழலில் குறைந்தபட்சம் இரு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இணையவழி செய்தி வலைதளங்களுக்கும் புதிய விதிகள் பொருந்தும். அந்த வலைதளம் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே, அதில் பணிபுரிபவா்கள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்க முடியும்.
அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் நபா்கள் அளிக்கும் தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்படும்’’
‘‘நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு, வெளிநாடுகளுடனான நல்லுறவு, அமைதி, நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்டவற்றை பாதிக்கும் வகையில் செயல்பட்டாலோ அல்லது அவதூறு பரப்புதல், வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, பத்திரிகையாளா்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.