கமல் நான்கு வேடங்களில் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் பீம்பாய் ஆக நடித்த பிரவீன் குமார் சோப்தி தனது 74-ம் வயதில் நேற்று மரணமடைந்தார்.
பிரவீன் குமார் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன். அத்லெட்டிக்களில் கலக்கியவர். 1960 காலகட்டங்களில் டிஸ்கஸ் த்ரோவில் தங்க மெடல்களை குவித்தவர். அதன்பின் இந்தியில் `ரக்ஷா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தொடர்ந்து இந்தியில் நடித்து வந்தார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான `மகாபாரதம்’ தொடரில் பீமனாக நடித்ததன் மூலம், பிரபலம் அடைந்தார். அதனால் தான் ‘மைக்கேல் மதனகாமராஜ’னில் அவருக்கு பீம்பாய் என்ற பெயரையும் கமல் சூட்டியிருப்பார் என்கிறார்கள். பிரவீன்குமார் அரசியலிலும் காலடி எடுத்து வைத்தவர்.
அவரது மறைவு பற்றி ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் டேவிட் ஆக நடித்திருந்த ஆர்.எஸ்.சிவாஜியிடம் கேட்டேன்.
”பீம்பாய் இறந்த விஷயம் இன்னிக்குத்தான் எனக்கே தெரியும். இந்த படத்துக்குள்ல அவர் எப்படி வந்தார்னு எனக்கு தெரியாது. அவரோடு காம்பினேஷன்கள் குறைவுதான். க்ளைமாக்ஸ் போர்ஷன்ல தான் சேர்ந்து நடிச்சிருப்போன். அவர் மதன் கேரக்டரோட பாடிகார்டு ஆக இருப்பார். அவரோட உயரத்துக்கும், தோற்றத்துக்கு அவரை பார்த்தவங்க முரட்டு ஆளா இருக்காரேனு நினைப்பாங்க. ஆனா, அவர் குழந்தை உள்ளம் படைத்தவர். ரொம்பவே மென்மையா பழகக்கூடியவர். அப்படியொரு உருவத்தை வச்சுக்கிட்டு, குதிக்கறது, தாவறதுனு பல ரிஸ்கான காட்சிகள்ல அசால்ட்டா நடிச்சிருந்தார். ரொம்பவும் கலகலப்பா பேசுவார்.
படப்பிடிப்பு பிரேக்குகள்ல கூட, தனியா மரத்தடியில் ஒரு ஓரமா போய் உட்காராம, எங்களோடதான் சேர்ந்து உட்காந்து பேசி மகிழ்வார். அவ்ளோ தமாஷா பேசுவார். அவர் மறைஞ்சிட்டார்னு கேள்விப்பட்டது மனசுக்கு கஷ்டமாதான் இருக்கு. நல்ல நடிகரை இந்திய திரையுலகம் இழந்திருக்கிறது” என்கிறார் சிவாஜி.