திருநெல்வேலி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய கேரளாவைச் சேர்ந்த பிஷப் மற்றும் ஐந்து பாதிரியார்களை தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
பத்தனம்திட்டா சிரோ மலங்கரா டயோசிஸின் பிஷப் சாமுவேல் மார் இரேனியோஸ் மற்றும் பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சாமகலா, ஜோஸ் களவியல் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலியில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், திருநெல்வேலியில் வருவாய், சுரங்கம், காவல்துறை மற்றும் வேளாண்மைத் துறைகளைச் சேர்ந்த பல அதிகாரிகளின் உதவியுடன் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை 2021 ஜூலை மாதம் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அப்போது நீதிபதிகள் என் கிருபாகரன் மற்றும் பி புகழேந்தி ஆகியோர் விசாரணையில், கேரளாவை சேர்ந்த மனுவேல் ஜார்ஜ், தமிழ்நாட்டில் எவ்வித சொத்துகளும், குவாரிகளும் இல்லாத போது, தெற்கு கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் கனிமங்களை சேமித்து வைப்பதற்காக அதிகாரிகளிடம் சட்டவிரோதமாக அனுமதி பெற்றது தெரியவந்துள்ளது. அதாவது, நவம்பர் 29, 2019 முதல் நவம்பர் 28, 2024 வரை கிராமத்தில் உள்ள பொட்டலில் ஒரு தடுப்பணையை ஒட்டியுள்ள 300 ஏக்கர் நிலத்திற்கான உரிமத்தைப் பெற்று, பட்டா நிலங்களில் ஆற்று மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் ஜார்ஜ் உள்பட் 20 பேர் மீது காவல் துறையினர் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜார்ஜ் சட்டவிரோதமாக கடத்தப்படும் மணல், பத்தனம்திட்டா டயோசிஸூக்கு சொந்தமான நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நிலமும் ஜார்ஜூக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், கேரளாவை சேர்ந்த பிஷப் மற்றும் 5 பாதிரியார்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.