டெல்லி: நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஒன்று அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவிய காலகட்டத்தில் வேலை இழப்பும் அதிகரித்தது. வேலை போய்விடுமோ என்ற கவலையில் பலரும் தற்கொலை செய்துகொண்டனர். கொரோனா பாதிப்பால் நிறுவனங்கள் பல மூடியதன் காரணமாக பலரும் வேலை கிடைக்காமல் தள்ளாடினர். இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் வேலை கிடைக்காத வேதனையில் 9,140 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், நாட்டில் வேலை கிடைக்காததால் 2018ல்- 2741 பேரும், 2019-ல் 2851 பேரும், 2020-ல் 3548 பேரும் உயிரை மாய்த்து கொண்டுள்ளனர். ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலாளிகளுக்கு உதவ ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்துவதாகவும் அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.