லக்னோ: உத்தரப் பிரதேசத் தேர்தலையொட்டி காங்கிரஸின் மூன்றாவது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரியங்கா காந்தி, ”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களிலேயே விவசாயக் கடன் ரத்து செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்தார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரியங்கா காந்தி பேசியது: “நாங்கள் இதுவரை மூன்று அறிக்கைகள் வெளியிட்டுள்ளோம். ஒன்று பெண்களுக்கானது, இரண்டாவது இளைஞர்களுக்கானது. இதோ இப்போது மூன்றாவது அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
உத்தரப் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும்தான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மாநிலத்தில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். காலிப்பணியிடங்கள் 12 லட்சம் நிரப்பப்படும். அதேபோல் புதிதாக 8 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்படும். உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பத்தே நாட்களில் அனைத்து விவசாயக் கடனும் ரத்து செய்யப்படும். மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிலுவை மின் கட்டணம் ரத்து செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே பெண்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் ஸ்மார்ட்போன், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர், பெண்க்களுக்கு இலவச பேருந்துப் பயணம், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வருடத்திற்கு மூன்று இலவச சிலிண்டர்கள் போன்றவை வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு, 50%-க்கும் மேல் பெண் பணியாளர்கள் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்களுக்கு வரிவிலக்கு மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியில் திமுக பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் சலுகையை அறிவித்து உரிமைப் பயணம் என்ற பெயரில் அதனை செயல்படுத்தியுள்ளது. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அண்மையில் வெளியிட்ட உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற சலுகையை அறிவித்தது. காங்கிரஸும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜக கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது.