தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை முடிந்து, அனைத்து நகர்ப்புற வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் முன்னதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், அவரவர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
மக்கள் பங்கேற்புடன் கூடிய ஊழலற்ற, வெளிப்படையான நகர்ப்புற உள்ளாட்சி நிர்வாகத்திற்கான வாக்குறுதிகள் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள ம.நீ.ம தேர்தல் வாக்குறுதி அறிக்கையில், “அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு, ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவுத்தொட்டி, காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், நிதி ஒதுக்கும் கவுன்சிலர் கூட்ட விவாதங்களை இணையதளத்தில் நேரலை செய்தல், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலைக்கு உயர் தொழில்நுட்ப உதவியுடன் முற்றுப்புள்ளி, கட்டட வரைபட அனுமதிகளை லஞ்சமில்லாமல் வழங்குதல் மற்றும் சென்சார் உதவியுடன் அவசர ஊர்திகளுக்குத் தடையில்லா போக்குவரத்து” ஆகிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.
Also Read: `கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச்சுவர்; தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது!’ -கமல்ஹாசன்