அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான உட்கட்சித் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
அதிமுக உட்கட்சித் தேர்தலை ரத்து செயக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் அதிமுகவில் புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக உட்கட்சித் தேர்தல், கட்சியின் விதிகளுக்கு எதிரானது, அமல்படுத்த முடியாதது மற்றும் சட்டவிரோதமானது. உட்கட்சித் தேர்தல் தேதிக்கு 21 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிடத் தவறியதன் மூலம் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கட்சி விதிமுறைகளை மீறியதாகவும், அதனால், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரியுள்ளார்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஒரு மாதத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”