அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் கணவர் டௌக்ளஸ் எம்ஹாஃப் வழக்கறிஞராக உள்ளார். இவர், வெள்ளை மாளிகையின் நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்துவதற்காக தனியாகவோ அல்லது கமலா ஹாரீஸ் உடனோ அடிக்கடி பயணம் செய்வார்.
இந்நிலையில், டௌக்ளஸ் எம்ஹாஃப் நேற்று வாஷிங்டனில் உள்ள டன்பார் உயர்நிலைப் பள்ளியில் ஆப்பிரிக்க அமெரிக்க வரலாற்று மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார்.
அங்கு, திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியா, எம்ஹாஃப் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றினர். வெடிகுண்டு மிரட்டலுக்கான காரணம் குறித்து பகிரப்படவில்லை.
இதுகுறித்து, வாஷிங்டன் பொதுப் பள்ளி செய்தித் தொடர்பாளர் என்ரிக் குட்டரெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்ஹாஃப் மற்றும் மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து உரிய நேரத்தில் எச்சரித்த ரகசிய சேவை மற்றும் போலீசாருக்கு எங்களது நன்றிகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்..
பஞ்சாப் எல்லையில் நுழைந்த பாகிஸ்தானின் டிரோனை சுட்டு விரட்டியடித்த இந்திய ராணுவம்