உ.பி. தேர்தல் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி

லக்னோ:
உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக  சட்டசபை தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா? என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, முதல் கட்ட தேர்தல், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்கள் மீதான பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.
சத்தீஸ்கரை போல் எங்கள் அரசு அமைந்தவுடன் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
நெல், கோதுமை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500க்கும், கரும்பு குவிண்டாலுக்கு ரூ.400க்கும் கொள்முதல் செய்யப்படும். 
மின்சாரக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும் மற்றும் தொற்றுநோய்க் காலத்தின் பாக்கிகள் தள்ளுபடி செய்யப்படும்.
தொற்று நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.25000 வழங்கப்படும்.
வேலைவாய்ப்பில், காவல்துறை, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள ரூ.12 லட்சம் பணியிடங்கள் நிரப்பபடும். 8 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பள்ளி சமையல்காரர்களுக்கு ரூ.5000 சம்பளம், பெண் காவலர்களுக்கு அருகில் பணியிடங்கள், கொரோனா போர்வீரர்களுக்கு ரூ.50 லட்சம் வரை இழப்பீடு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.