திருச்சி: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இடம்பெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பிரதிநிதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி ஆகியோர் அனுப்பிய கடிதத்தின் விவரம்:
திமுக முன்னெடுத்துள்ள அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பிரதிநிதிகளாக தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முகம்மது பசீர் எம்.பி, மாநில துணைத் தலைவர் கே.நவாஸ் கனி எம்.பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிப்.14-ம் தேதி நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் உருவாக்கப்படவுள்ள குறைந்தபட்ச செயல் திட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரும் கோரிக்கைகள் குறித்து முடிவு செய்து, தங்கள் கவனத்துக்கு அனுப்பவுள்ளோம்.
தாங்கள் முன்னெடுத்துள்ள இந்தப் புதிய முயற்சி முழு வெற்றி பெற வாழ்த்துகள்.