கடந்த சில வருடங்களாக பயனர்கள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் யாஹூ க்ரூப்ஸ் வசதியை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
2001-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாஹூ க்ரூப்ஸ் சேவையால், ரெட்டிட், கூகுள் க்ரூப்ஸ், ஃபேஸ்புக் க்ரூப்ஸ் போன்ற மற்ற சேவைகளுடன் போட்டி போட முடியவில்லை. தொடர்ந்து பயனர்கள் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்த சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கூறியுள்ள வெரிஸோன் நிறுவனம்,”கடந்த சில வருடங்களாக யாஹூ க்ரூப்ஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது. அதே நேரம் நம்பக்கூடிய, உயர்வான விஷயங்களைத் தேடுபவர்களால், எங்களின் மற்ற சேவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவு பல பயனர்களைப் பார்க்க முடிந்தது.
இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றாலும், வியாபாரத்தின் மற்ற அம்சங்கலில் கவனத்தை அதிகரிக்கும் போது நமது நீண்ட நாள் திட்டத்தில் பொருந்தாத விஷயங்கள் குறித்து சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்கத்தான் வேண்டும்.
யாஹூ க்ரூப்ஸுக்கு நீங்கள் அனுப்பிய, உங்களுக்கு வந்த மின்னஞ்சல்கள் அப்படியே உங்கள் மின்னஞ்சலில் இருக்கும். டிசம்பர் 15 முதல் யாஹூ க்ரூப் உறுப்பினர்களிடையே செய்திகள் அனுப்பிக் கொள்ள முடியாது. டிசம்பர் 15க்குப் பிறகு யாஹூ க்ரூப்ஸ் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அது போகாது” என்று குறிப்பிட்டுள்ளது.
வரும் அக்டோபர் 12 முதல் புதிதாக குழுக்களை உருவாக்கும் வசதி நிறுத்தப்படும். யாஹூ க்ரூப்ஸ் இணையதளமும் செயல்பாடு டிசம்பர் 15 முதல் மொத்தமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வயர்லெஸ் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வெரிஸோன் கடந்த 2017ஆம் ஆண்டு யாஹூ நிறுவனத்தை வெறும் 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.