புதுடெல்லி: பொருளாதார வழித்தடம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதாக குறிப்பிட்ட சீனா – பாகிஸ்தானின் கூட்டறிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வர்த்தக பயன்பாட்டிற்காக சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்து வருகிறது. இந்த வழித்தடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. ஆனால், பொருளாதார வழித்தடம் குறித்து சீனா – பாகிஸ்தான் வெளியிடும் எந்தவொரு கூட்டறிக்கையிலும் இதை ஆக்கிரமிப்பு காஷ்மீர் என கூறாமல் ஜம்மு காஷ்மீர் என்று கூறுவதையே வழக்கமாக கொண்டுள்ளன.இந்நிலையில், பீஜிங்கில் சீன அதிபர் ஜின்பிங், பாகிஸ்தான் பிரமதர் இம்ரான் கான் இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கடந்த 6ம் தேதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலும் பொருளாதார வழித்தடம் காஷ்மீர் வழியாக செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று அளித்த பேட்டியில், ‘ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகள். பாகிஸ்தானின் சட்ட விரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் மற்ற நாடுகளின் நிலைமையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம்,’’ என்றார்.