கேரளாவில் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தைச் சேர்ந்த சியாமா – மனு இணை, காதலர் தினத்தன்று திருநர் – திருநங்கை அடையாளங்களுடன் தங்கள் திருமணத்தை பதிவுச் செய்யவுள்ளனர்.
எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை சமீப ஆண்டுகளாகவே மாறியுள்ளது. குறிப்பாக இதுகுறித்த விவாதம் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருவதால், இதனால் உருவான நேர்மறை விளைவுகள் சமூகம், சட்டம், குடும்ப ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்தான் கேரளாவில் திருநர் மனு, திருநங்கை சியாமா இடையே காதலர் தினத்தன்று நடக்கும் திருமணம் கவனம் பெற்றுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர்கள் திருநர் மனு, திருநங்கை சியாமா. இவர்கள் இருவரும் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் திருநர், திருநங்கை அடையாளத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி இருவரும் திருநர், திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்களது திருமணத்தைப் பதிவு செய்ய உயர் நீதிமன்றத்தை அணுகத் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து திருநர் மனு கூறும்போது, “எங்களுக்குத் தெரிந்தவரை, இதுதான் முதல் பதிவுத் திருமணம் என்று நினைகிறோம். திருநங்கை, திருநர் அடையாளத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ள விரும்பும் பிறரும் இங்கு இருக்கலாம். நாங்கள் அவர்களுக்கான பாதையை அமைக்க விரும்புகிறோம்.
சாதகமான முடிவு வரும் என நம்புகிறோம். நாங்கள் காதலர் தினத்தன்றுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜாதகத்தில் அந்த தேதியைதான் தேர்வு செய்தனர்” என்று தெரிவித்தார்.
தங்களைச் சுற்றி இருந்த நெருக்கடிகள் குறையும்வரை சியாமாவும், மனுவும் தங்களது காதலை வெளிப்படையாகக் காட்டி கொள்ளவில்லை என்றும், எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தினரில் பலருக்கும் தங்கள் இருவருக்கும் இடையே இருந்த காதல் தெரியாது என்றும் இருவரும் தெரிவித்தனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டுதான் மனு, சியாமாவிடம் தனது காதலை தெரிவித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் நிரந்தரமான வேலை இல்லை. இருவரும் அவர்களது குடும்பத்தை பார்க்க வேண்டிய சூழல் இருந்தது. இருவரும் நிரந்தர வேலை பெறும் வரை காத்திருந்ததாகவும், அதனைத் தொடர்ந்தே தங்களது குடும்பத்தினரிடம் இருவரும் தங்களது திருமண திட்டத்தை கூறியுள்ளனர்.
பிப்ரவரி 14-ஆம் தேதி, காலை 9.30 மணியளவில் மனு, சியாமா இருவரது திருமணமும் நடைபெறவுள்ளதாகவும், திருமணத்திற்கு குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எல்ஜிபிடிக்யூ+ சமுகத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
திருநர், திருநங்கை அடையாளத்தின் கீழ் திருமணம் செய்யவுள்ள மனு, சியாமாவின் முடிவு, கேரளாவில் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.