இலங்கையின் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சூழ்ச்சியால் அன்றி மக்களுக்கான பணிகள் ஊடாக முடிந்தால் அரசாங்கத்தை வீழ்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்த நிலையில், தாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எதிர்வரும் மூன்று வருடங்களில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உறுதியளித்துள்ளார்.
ஆளும் பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு அநுராதபுரம் – சல்காது மைதானத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய
“நாங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். இந்த நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாத்துள்ளோம்.
கடந்த ஆட்சியாளர்கள் பொறுப்பற்ற செயற்பாட்டால் இறுதியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது.
15 வருடங்களாக அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
அவர்கள் நாட்டிற்காக என்ன செய்தார்கள்.
எமது கொள்கைகள் எதிர்காலத்திற்கானவை. விவசாயிகள், மாணவர்கள் என அனைவரதும் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்கின்றோம்.
எங்களுடன் இணையுமாறும், என் மீது நம்பிக்கை வைக்குமாறும் நான் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
இந்த அரசாங்கத்தை வீழ்த்த, தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன.
எங்களது வாக்குறுதிகளை எதிர்வரும் மூன்று வருடங்களில் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கின்றோம்” என்றும் தெரிவித்துள்ளார்.