புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை யுடன் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை களுக்கு பிப்.10-ம் தேதி (இன்று) முதல் மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக, மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் பாஜகவுக்கு கடும் சவால்களை அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி அளித்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது.
இந்நிலையில், 5 மாநில தேர்தல் தொடர்பாக செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:
சப்கா சாத், சப்கா விகாஸ் (அனைவரின் ஒத்துழைப்பு, அனைவரின் வளர்ச்சி) என்பது பாஜகவின் தொலைநோக்கு பார்வையாக உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டே மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்தகால ஆட்சியில் இருந்த குறைகளை களைவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். தற்போது நேரடியாக பயனாளிகளுக்கே அரசின் திட்டங்கள் சென்று சேர்கின்றன. விவசாயிகளுக்கு மத்திய அரசு அளிக்கும் தொகை, அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக சென்று சேர்வதற்கான திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.
தேர்தல் காலமானாலும் சரி, மற்ற காலத்திலும் சரி, அதிகாரத்தில் இருக்கிறோமோ அல்லது கூட்டணியில் இருக்கிறோமோ, எதுவாக இருந்தாலும் மக்கள் நலன் ஒன்றுதான் பாஜகவின் தாரக மந்திரம். அதைத்தான் இவ்வளவு நாட்களாக செயல்படுத்தி வந்துள்ளோம்.
வரவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றி முகம்தான். அனைத்து மாநிலங்களிலும் இதை நான் கண்டேன். 5 மாநிலத் தேர்தல்களிலும் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். 5 மாநில மக்களும் பாஜக மீது முழு நம்பிக்கை வைத்து சேவையாற்ற வாய்ப்பை வழங்குவார்கள்.
நாங்கள் அதிகாரத்தில் இருக்கும்போது அதிக சக்தியுடன் பணி யாற்றி மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துகிறோம். இந்த 5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான அலை வீசவில்லை. மாறாக ஆதரவான அலையே வீசுகிறது.
உத்தரபிரதேசத்தில் 2014, 2019 மக்களவைத் தேர்தல், 2017 சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்றது.
உ.பி.யின் ‘ஒருமுறை ஆட்சிக்கு வாருங்கள், மறுமுறை வீட்டுக்கு செல்லுங்கள்’ என்ற பழைய கொள்கையை மக்கள் மாற்றிவிட்டனர். 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர் எங்களது செயல்பாடுகளை பார்த்த உ.பி. மக்கள், அதிக நம்பிக்கை வைத்தனர். அதன் பலனாக 2017 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2019 மக்களவைத் தேர்தலிலும் அமோக வெற்றி கண்டோம். தற்போது 2022-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி முகத்தை காணவிருக்கிறோம்.
பாஜகவின் விளம்பரப் பலகைகளில் உள்ள எனது புகைப்படம், பாஜகவின் தொண்டர்களைத்தான் சித்தரிக்கிறது. தொண்டர்கள் வேறு, நான் வேறு அல்ல. எப்போதுமே, பாஜக கூட்டுத் தலைமையை நம்புகிறது. நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற பழகி விட்டோம்.
பாஜகவினருடன் நான் ஒரு புகைப்படத்தில் இருந்தால், நானும் அவர்களைப் போலவே ஒரு கட்சித் தொண்டனாக உணர்கிறேன். பாஜக பல வெற்றிகளையும், பல தோல்விகளையும் சந்தித்த கட்சிதான். தேர்தல் என்பது திறந்த வெளி பல்கலைக்கழகம் என்று கூறலாம். தேர்தலில் வெற்றி அடைகிறோமோ அல்லது தோல்வியைப் பெறு கிறோமோ, ஒரு புதிய களத்துக்கான வாய்ப்பைப் பெறுகிறோம் அல்லது சேவையாற்றுவதற்கான வாய்ப்பை மக்கள் நமக்குத் தருகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.