சென்னை: தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்குநோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் உள்ள அரசு கரோனா மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, கட்டமைப்புமற்றும் வசதிகளை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவமனை இயக்குநர் நாராயணசாமி, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகி யோர் உடன் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கரோனா நோயாளிகளில் 70 சதவீதம் பேர்உயிரிழக்கின்றனர். எனவே, தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிரிழப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். தமிழகத்தில் 1 கோடியே 10 லட்சத்து 21,196 பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களை இலக்கு வைத்துதான் வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. வரும் சனிக்கிழமை 22-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
10 கோடி தடுப்பூசி இலக்கு
இதுவரை 4 லட்சத்து 99,408 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 26 லட்சத்து 92,917 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 40,383 சிறுவர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 9 கோடியே 71 லட்சத்து 61,368 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 10 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடைவோம்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குருதிசார் ஆய்வின் (சீரோ சர்வே) 4-ம்கட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான முதல்கட்ட ஆய்வில் 32 சதவீதம் பேருக்கும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 2-ம் கட்ட ஆய்வில் 29 சதவீதம்பேருக்கும், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் வெளியான 3-ம் கட்ட ஆய்வில் 70 சதவீதம் பேருக்கும் தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது.
அதேபோல், தமிழகத்தில் நேற்றுமுன்தினம் வெளியான 4-ம் கட்டஆய்வில் 10 வயதுக்கு மேற்பட்ட87 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு 30 குழுக்களை கொண்ட 1,706 பேர், 32,245 கிராமமற்றும் நகர்ப்புற மக்களின் ரத்தமாதிரிகளை சேகரித்து மாநில பொது சுகாதாரத் துறை ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியான முடிவுகளாகும்.
திருவாரூர் மாவட்டம் முதலிடம்
இதில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 90சதவீதமாகவும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 69 சதவீதமாகவும் உள்ளது தெரியவந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்சமாக திருவாரூரில் 93 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 92 சதவீதம் பேருக்கும், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் 91 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 90 சதவீதம் பேருக்கும், நெல்லை, நாமக்கல், சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 88 சதவீதம் பேருக்கும், நீலகிரி, அரியலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 87 சதவீதம்பேருக்கும், தேனி, திருச்சி, திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி,கரூர், வேலூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 86 சதவீதம் பேருக்கும்,
திருவண்ணாமலை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 85 சதவீதம் பேருக்கும், தருமபுரி, காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் முறையே 84, 83, 82 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
தமிழக அரசின் நீட் மசோதாவைஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பவாய்ப்பில்லை. கடந்த 2020-ம்ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், நீட் தேர்வு தமிழகத்துக்கு அவசியமில்லை. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கல்வித் திறன் அதிகமாக உள்ளது, அதனால் நீட் தேர்வை 5 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டும் என சொல்லியிருந்தார். தற்போது, மாற்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நீட் தேர்வுக்கு பாஜக போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்டா வைரஸ் குறைந்தது
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, “தமிழகத்தில் கடந்த டிச.4 மற்றும் 7-ம் தேதிகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, 100 சதவீதம் டெல்டா வகைகரோனா தொற்று காணப்பட்டது. அதன்பிறகு 13-ம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 87 சதவீதம் டெல்டாவும், 13 சதவீதம் ஒமைக்ரான் தொற்றும் காணப்பட்டது.
டிச.14-ம் தேதி 53 சதவீதம் டெல்டாவும், 47 சதவீதம் ஒமைக்ரான் வைரஸும், 21-ம் தேதி 18 சதவீதம்டெல்டாவும், 82 சதவீதம் ஒமைக்ரானும் காணப்பட்டது. தற்போது, ஜன.1-ம் தேதி 17 சதவீதம் டெல்டாவும், 83 சதவீதம் ஒமைக்ரானும், 26-ம் தேதி 3 சதவீதம் டெல்டாவும், 97 சதவீதம் ஒமைக்ரான் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது” என்றார்.