லக்னோ :
உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். பா.ஜனதா, சமாஜ்வாடி-லோக்தளம் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது.
முதல்கட்ட தேர்தல் நடக்கும் 58 தொகுதிகளில் 53 தொகுதிகள் பா.ஜனதா வசம் உள்ளவை. தலா 2 தொகுதிகள், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வசம் உள்ளவை. ஒரு தொகுதி, ராஷ்டிரீய லோக்தளம் வெற்றி பெற்ற இடமாகும்.
முசாபர்நகர், மீரட், பாக்பத், காசியாபாத், ஷாம்லி, ஹாபூர், கௌதம் புத்தநகர், புலந்த்ஷாஹர், அலிகார், ஆக்ரா மற்றும் மதுரா உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2 கோடியே 27 லட்சம் வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் தங்களது வாக்குகளை பதிவு செய்கின்றனர்.