புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4-வது நாளாக நேற்றும் 1 லட்சத்திற்கும் கீழ் உள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
நேற்று முன்தினம் பாதிப்பு 71,365 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 60 ஆக உயர்ந்தது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 23,253 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 7,142, கர்நாடகாவில் 5,339, தமிழ்நாட்டில் 3,971, ராஜஸ்தானில் 3,728, மத்திய பிரதேசத்தில் 3,226, குஜராத்தில் 2,560, உத்தரபிரதேசத்தில் 2,056 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினசரி பாதிப்பு விகிதம் 4.54 சதவீதத்தில் இருந்து 4.44 ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 7.57 சதவீதத்தில் இருந்து 6.58 ஆகவும் குறைந்துள்ளது.
தினசரி பாதிப்பை விட நாள்தோறும் நோயின் பிடியில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை நேற்றும் அதிகமாக இருந்தது. அந்த வகையில், நேற்று ஒரேநாளில் 1,67,882 பேர் நலமாகி வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 11 லட்சத்து 80 ஆயிரத்து 751 ஆக உயர்ந்தது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 7,90,789 ஆக சரிந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,02,039 குறைவு ஆகும்.
நாடு முழுவதும் இதுவரை 171 கோடியே 28 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 46,44,382 டோஸ்கள் அடங்கும்.