செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் படம், மகான்.
காந்தி மகானாக விக்ரம். சுதந்திர போராட்ட தியாகி குடும்பத்தைச் சேர்ந்த அவரை மதுவின் தீமைகளை சொல்லி சொல்லி வளர்க்கிறது குடும்பம். ஆனால், மது விற்பனை செய்யும் நிலைக்கு ஆளாகிறார்.
அவரது ஐ.பி.எஸ். மகன் தாதாபாய் நௌரோஜி (துருவ்) மூலம் சங்கடங்கள் ஏற்படுகிறது.
அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார்கள்.
‘தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம், சுதந்திரமே அல்ல’ என்ற காந்தியின் வாசகங்களுடன்தான் படம் துவங்குகிறது.
காந்தி மகானாக விக்ரம், தாதா பாய் நௌரோஜியாக துருவ், சத்யவானாக பாபி சிம்ஹா, நாச்சியாராக சிம்ரன், ராக்கியாக சனந்த் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அதுவும் விக்ரம் பற்றி சொல்லவே வேண்டாம். படத்தை நகர்த்துவதே அவர்தான்.
துருவ் சிறப்பாக நடித்திருந்தாலும் மனம் ஒட்டவில்லை. இந்த சின்ன வயதில் ஐ.பி.எஸ். கதாபாத்திரத்துக்கு ஒத்துக்கொண்டிருக்க வேண்டாம்.
இடைவேளை வரை, மது வியாபாரத்தில் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா எப்படி முக்கிய புள்ளி ஆகிறார்கள் என்றே கதை நகர்கிறது. இவ்வளவு டீட்டெய்ல் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
அதன் பிறகு, விக்ரமும் துருவ்வும் இடையே தந்தை – மகன் மோதல்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ், ரசிக்கவைக்கிறார்.
ரயில் கடக்கும் போது அதிர்வுகளை வெளிப்படுத்த கேமராவை அசைப்பது போன்ற காட்சிகள் ஒளிப்பதிவின் சிறப்புக்கு ஒரு காட்சி பதம்.
பல்வேறு காலகட்டங்களில் படம் நகர்கிறது, அந்தந்த காலத்தை மிகச் சிறப்பாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் கலை இயக்குநர்.
மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை விரிவாகச் சொல்லி இருக்கிறார்கள். அதை போரடிக்காமலும் சொல்லி இருக்கிறார்கள்.