வீடு கட்டிய பிறகு வசூலிக்க வந்த அதிகாரிகள்| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக்கணக்கில் தவறுதலாக ரூ.15 லட்சத்தை அதிகாரிகள் டெபாசிட் செய்தனர். இது, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக கருதிய அந்த விவசாயி, அதில் ரூ.9 லட்சம் எடுத்து வீடு கட்டினார். தற்போது, தவறை உணர்ந்த வங்கி அதிகாரிகள், பணத்தை திருப்பி அளிக்கும்படி விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவில் வசிப்பவர் ஞானேஸ்வர் ஓட். இவர், அப்பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் ஜன்தன் கணக்கு வைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆக.,21ல், விவசாயியின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் பணம் டெபாசிட் ஆனது. இதனையறிந்த ஞானேஸ்வர், பிரதமர் தேர்தலின் போது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக எண்ணியதுடன், பணம் டெபாசிட் செய்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும், தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை எடுத்து புதிதாக வீடு கட்டினார்.

ஆனால் உண்மையில், அந்த பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தவறுதலாக ஞானேஸ்வர் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. 4 மாதங்களாக பணம் வராததை அறிந்த பஞ்., நிர்வாகத்தினர் வங்கியில் விசாரணை நடத்திய போது நடந்த தவறு தெரியவந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கள் மீது உள்ள தவறை உணர்ந்து கொண்ட அதிகாரிகள், பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஞானேஸ்வருக்கு நோட்டீஸ் அனுப்பினர். வங்கிக்கணக்கில் எஞ்சியிருந்த ரூ.6 லட்சத்தை வங்கி எடுத்து கொண்டது. வீடு கட்டுவதற்கு செலவிட்ட ரூ. 9 லட்சத்தை எப்படி திருப்பி கட்டுவது என ஞானேஸ்வரும், அவரிடம் இருந்து பணத்தை எப்படி திருப்பி வாங்குவது என அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.