திருப்பதி:
திருப்பத்தூரிலிருந்து 32 பயணிகளுடன் திருப்பதிக்கு இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. திருப்பதி அருகே சந்திரகிரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பஸ்சை நிறுத்துமாறு போலீசார் சைகை செய்தனர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் கீழே குதித்து நாலாபுறமும் தப்பி ஓடினர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தப்பி ஓடியவர்களை பிடிக்க விரட்டினர்.
ஆனால் அவர்களை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. பஸ்சில் 32 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் திருமணத்திற்கு வருவது போல் உடை அணிந்து இருந்தனர்.
இதையடுத்து போலீசார் பஸ்சை பறிமுதல் செய்து பஸ் மற்றும் கண்டக்டரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ்சில் திருமணத்திற்கு செல்லும் பயணிகள் போல் வந்தவர்கள் அனைவரும் திருப்பதியில் செம்மரம் வெட்ட வந்தவர்கள் என தெரியவருகிறது.
போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடி உள்ளனர். தப்பி ஓடியவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றனர்.