புதுடில்லி: மத்திய அரசு திருத்தப்பட்ட கோவிட் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதை நீக்கி, அதற்கு பதிலாக 14 நாட்கள் தொற்று அறிகுறிகள் காணப்படுகிறதா என சுய கண்காணிப்பை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய வழிகாட்டுதல்கள் பிப்ரவரி 14 திங்கள் முதல் அமலுக்கு வரும். தொடர்ந்து மாறிவரும் கோவிட் வைரசை கண்காணிக்க வேண்டியது அவசியம். அதே சமயம் பொருளாதார நடவடிக்கைகள் தடையின்றி தொடர வேண்டும் என்பதையும் ஏற்றுகொள்ள வேண்டியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணியரும் கடந்த 14 நாட்களின் பயண வரலாறு உள்ளிட்டவற்றை சுய உறுதிமொழி படிவத்தில் பூர்த்திசெய்ய வேண்டும். அப்படிவம் ஏர் சுவிதா இணையதளத்தில் இருக்கும்.
மேலும், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் கட்டாயம் ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் பரிசோதனை சான்றை பதிவேற்ற வேண்டும். அவை 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதற்கு பதிலாக முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதற்கான சான்றையும் பதிவேற்றலாம். இந்த வாய்ப்பு, இந்தியா அங்கீகரித்திருக்கும் தடுப்பூசி திட்டங்களை கொண்ட 72 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு தான் பொருந்தும். கனடா, ஹாங்காங், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை இதிலடக்கம்.
விமான நிறுவனங்கள் சுய உறுதிமொழி படிவத்தை முழுமையாக நிரப்பி, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி போட்டதற்கான சான்றை பதிவேற்றியவர்களை மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
கோவிட் அறிகுறிகளற்ற நபர்கள் மட்டுமே விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதே போன்று இந்தியா வந்திறங்குபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனையுடன், ரேண்டமாக ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையும் நடக்கும். கோவிட் இருப்பது தெரிந்தால் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை நடக்கும். மற்றவர்கள் 14 நாட்கள் சுய கண்காணிப்பில் இருந்தால் போதும். இவ்வாறு மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
Advertisement