கர்நாடகாவில் பெரும் பரபரப்பாகி வரும் ஹிஜாப் பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக கல்லூரி ஒன்றில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்குள் வர அனுமதி மறுக்கப்பட, அதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகளால் தொடங்கப்பட்ட போராட்டமானது, பின்னர் இந்து அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கலவர நிலவரம் ஆனது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்திருக்கிறார்.
அசாதுதீன் ஒவைசி, “நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த ஹிஜாப் விவகாரம் பாஜக-வின் வெறுப்பு அரசியலையே காட்டுகிறது. பா.ஜ.க-வின் இந்த அரசியலை ஹிஜாப் அல்லது முஸ்லிம்களுடன் இணைக்காதீர்கள். அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள தங்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள்” என்று கூறியுள்ளார். மேலும் ஹிஜாப் விவகாரத்தில், பாகிஸ்தானிலிருந்து வரும் ஆதரவு குறித்துப் பேசிய ஒவைசி, “இங்கு என்ன பிரச்சனை நடக்கிறது என்று பார்க்காதீர்கள், உங்கள் நாட்டுப் பிரச்னைகளை கவனியுங்கள். இது எங்கள் நாடு, எங்கள் பிரச்னை இதில் பாகிஸ்தான் தலையிட வேண்டாம்” என்று தனது கருத்தை வெளிப்படுத்தினார்.