நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சிவானந்தா காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அதாவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல் தற்போது வரை கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகின்றது என்றார். 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைக்கப்பட அஸ்திவாரமாக இருந்தது, கோவை வ.உ.சி திடலில் நடத்தப்பட்ட பிரமாண்டமான கூட்டம் தான் என்றார். அந்த பொதுக்கூட்டத்தின் மூலம் தமிழகத்தில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அப்போது அகற்ற முடிந்தது என்றும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் எண்ணங்களை ஒருங்கே பெற்றவர் ஜெயலலிதா என்றும் தெரிவித்தார்.
மேலும் மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என்றும் ஏழை மக்களுக்கு 5.5 லட்சம் வீடுகளை கட்டிகொடுத்தது உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் மனதில் அசைக்க முடியாத திட்டங்களாக இருக்கின்றது என்றும் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தடம் பிறழாமல் தொடர்ந்து செய்து காட்டியது என்றார். 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், வரிவருவாயில் 3 இல் ஒரு பங்கை கல்விக்கு ஒதுக்கியது என பல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்றும் கூறினார். தமிழகத்தில் மாணவர்களின் உயர்கல்விக்கு வித்திட்டவர் ஜெயலலிதா’ என்றும் தெரிவித்தார். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக -வின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணம் ஆகும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.