தலைவருடன் கைகோர்க்கும் நெல்சன்-அனிரூத்
2/10/2022 6:25:40 PM
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படத்தை, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கோலிவுட்டில் ‘கோலமாவு கோகிலா’ மூலம் காலடி எடுத்து வைத்த இயக்குநர் நெல்சனுக்கு, அந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் ஹிட்டானதால், அடுத்த படத்தில் தனது நண்பரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே வெளியான டாக்டர், வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, சிவகார்த்திகேயனை 100 கோடி கிளப்பில் கொண்டுபோய் சேர்த்தது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு, இளைய தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம், வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அந்தப் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் சூட்டிங் தொடங்குகிறது. அனிரூத் இசையமைக்கிறார்.