லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, பாஜக தலைமையிலான அரசு அவசியம் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14- ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, சஹரான்பூரில் பாஜக நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசும்போது, “முஸ்லிம் பெண்கள் ஒடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான அரசு அவசியம்.
முஸ்லிம் பெண்களை முத்தலாக்கிலிருந்து விடுவித்தது பாஜக அரசு. முஸ்லிம் பெண்கள் பாஜக அரசை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியபோது, எதிர் அணியினர் கவலையடைந்தனர். பாஜக ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுடனும் நிற்கிறது” என்றார்.
கர்நாடகா மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஹிஜாப் (முக்காடு), புர்கா (முழு நீள உடை) அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்தச் சூழலில், உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் மீதான் ஒடுக்குமுறை குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.